Thursday, June 24, 2010

அன்பு அப்புக்கு அண்ணன் கலையின் பாராட்டுப்பத்திரம்....

அன்பு அப்புக்கு அண்ணன் கலையின் பாராட்டுப்பத்திரம்....

ஈகரைக்கோர் சிறப்புண்டு என்னவென்று வினவுவீரே
சோகமென்று வருவீரெனில் சோர்வுகள் சோர்ந்துபோகும்
வேகம் கொண்டு விரைந்து செல்லும் அன்பான அப்பு உண்டு
ஏகத்துக்கும் அன்புமழை... நனைந்தீரெனில் குளிர்ந்து போவீர்..

பாராட்ட வார்த்தை தேடி களைத்துப்போவீர் கட்டாயம்
சீராட்ட உண்டு எங்கள் அப்புவின் பாசக்குரல்தான்
தேரோட்டம் போல்தான்உண்டு தேனினிய அன்புச்சொற்கள்
யாராட்டம் என்றே நீங்கள் அன்னையை நினைவுகொள்வீர்...

தேடிநிதம் அதிசயங்கள் தேனியாய்ப் பதிவதிலும்தான்
ஓடிஓடி அன்பான வாழ்த்துக்கள் பதிவதிலும் தான்
வாடி நிற்கும் அன்புள்ளம் சிரித்திட உத்வுதல் தான்
நாடி நீ அழைத்துப்பாரேன் அன்பான அப்பு உண்டு....

புகைப்படங்கள் எங்கும் உண்டு ஆனாலும் அப்புசொல்லும்
வகையான அதிசயங்கள் வலைகளில் அற்புதங்கள்..
மிகையேதும் இல்லைசொல்லில் மிஞ்சிடும் கலைகள் இங்கே
சிகையழகு செய்திமுதல் சிக்கலான கலைகள் உண்டு...

அன்பாகக் கதைத்துப்பாரேன் அழகான குழந்தைதோற்கும்
முன்பாக வந்து உன்னை விரல்பிடித்துக் கதைகள் சொல்லும்
வம்பேதும் கண்டதில்லை வீண்வாதம் செய்வதில்லை
அம்புபோல் வந்தேநிதம் தனலட்சியம் தனிலே வெல்லும்...

சிற்றெறும்பு தன்னில் மிகுந்த எடையினைச் சுமக்கும் போலே
வற்றாத அன்பு நதியில் வகைபெறக் களிக்கும் அப்பு
தெற்றேதும் கூறிடஓர் தெள்ளுதமிழ் வரிகள் இல்லை
முற்றேதும் குறிக்கவியலா முடிவிலா அன்பன் அப்பு...

ஈகரைக்கு வந்தபின் தான் இவ்வன்பு பெற்றானோ இல்லை
தாகமுடன் கவிதை எழுத ஆர்வந்தனைக் கற்றானோ
வேகமாய் முன்னேறிஇங்கு காதல்தனைப் பெற்றானோ
ஏகத்துக்கும் காதல் வரிகள் எழுதி எம்மை அயரச்செய்தான்..

எட்டாத எண்ணிக்கை பத்தாயிரம் படைத்தான் இங்கே
தட்டாமல் பெரியோர் சொல்லை தலைமேல் தாங்கி நின்றான்
மொட்டாக இருந்த காதல் முகிழ்ந்திடக் கவிதை கண்டான்
கட்டாயம் இவனை இங்கே வாழ்த்தியே தீரல் முறையே...

ஒன்பது ரசங்கள் தன்னை உலகத்தில் கண்டிருப்பீர்
வம்பது ஏதுமின்றி பணிவது பத்தாம் ரசந்தான்
ஐம்பது வயதில்கொள்ளும் அருமையான பண்பதனை
முன்பதைப் பெற்றே இங்கு விளங்கிடும் அப்பு வாழ்க...

பத்தாயிரம் பதிவுக்கிங்கே பத்துப்பா எழுதஎண்ணி
முத்தான அப்புவுக்கு வரைந்துவிட்டேன் இப்பாபத்தும்
கொத்தாகக் கூத்துக்குலுங்கும் கவின்மலர் தன்னை ஈந்தே
அத்தாவை வணங்கி நானும் அப்புவுக்கே வழங்கினேனே....
என் இளவல் அப்புவை வாழ்த்திப் பெருமையுறும்...

அன்பு அண்ணன்
கலை

2 comments:

  1. தங்களுக்கு கிடைத்த பாராட்டு பத்திரம் பார்ர்க்கும் தருணம் என் மனதுக்குள்ளும் மகிழ்ச்சி அலை...

    மிக்க மகிழ்ச்சி அப்பு... வாழ்த்துகள்...

    என்றும் அன்புடன்,

    ReplyDelete